July 21, 2008

சைகோ பீதியை மறைக்க 'என்கவுன்டர்' திட்டம்

சைகோ பீதியை மறைக்க 'என்கவுன்டர்' திட்டம்

சென்னை: சைகோ கொலையாளி பீதியை மக்களிடத்தில் இருந்து அகற்ற, "என் கவுன்டர்' திட்டத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். தங்களிடம் சிக்கிய டிப் டாப் நபர், சைகோவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னை வடபழனி, அசோக் நகர், குமரன் நகர் பகுதியில் சைகோ வாலிபர், வாட்ச்மேன்கள் மற்றும் பிளாட்பாரத்தில் படுத்து தூங்குபவர்களை தலையில் அடித்து, கொலை செய்து எரித்து விடுகிறார். சைகோ நபரை பிடிக்க வடபழனி, அசோக் நகர் பகுதிக்கு இரவு நேரத்தில் போலீசார் "சீல்' வைத்துள்ளனர்.


உயர் போலீஸ் அதிகாரிகள் இரண்டு நாட்களாக அப்பகுதியில் தொடர் ரோந்து செல்கின்றனர். நேற்றும், நேற்று முன் தினமும் சைகோ கொலையாளி கைவரிசை காட்ட முடியாத அளவுக்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. "சைகோ கொலையாளியை கண்டுபிடிக்க முடியா விட்டாலும் பரவாயில்லை; மேற்கொண்டு கொலைகள் நடைபெறாமல் தடுத்து விட வேண்டும்' என போலீஸ் கமிஷனர் சேகர், அதிகாரிகளுக்கு கண்டிப் பான முறையில் உத்தரவிட்டுள்ளார்.சைகோ கொலையாளி என்ற சந்தேகத்தில் பலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுள், "டிப் டாப்'பாக தென்படும் ஒரு நபர், சைகோ ஆசாமியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது.


கொலை சம்பவம் நடந்த இடங்களில் கொலையாளியின் கைரேகை பதிவாகவில்லை. உண்மையான சைகோ கொலையாளி போலீசாரிடம் சிக்கினால் கூட, கொலை வழக்கிற்கு முக்கிய ஆதாரமான கைரேகை கிடைக்காததால், குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. இதற்கு காரணம், கொலை நடந்த இடத்தில் கைரேகை பதியும் தன்மையுடைய கண்ணாடி போன்ற மென்மையான பொருட்கள் இல்லை. கொலைகள் அனைத்துமே சொரசொரப் பான மண் தரை மற்றும் சாலையை ஒட்டிய பகுதியில் நடந்துள்ளது. இந்த பிரச்னைகளால், சைகோ கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் தகவல் வெளியானது. சைகோ கொலையாளியின் நடமாட்டம் மூன்றாவது நாளாக கட்டுப்படுத்தப் பட்டதால், பீதியில் உறைந்துள்ள அப்பகுதி மக்களின் கவனத்தை திசை திருப்ப, "என்கவுன்டர்' திட்டத்தையும் போலீசார் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: